திருப்பதி லட்டு தயாரிப்பு கூடத்தில் பவன் கல்யான் பரிகார பூஜை
- பரிகார பூஜை செய்வதற்காக பவன் கல்யாண் நேற்று மாலை திருப்பதி வந்தார்.
- லட்டுக்கு பரிகார பூஜைகளை செய்தார்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து ஆந்திரா துணை முதல் மந்திரி பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதத்தை தொடங்கினார். பரிகார பூஜை செய்வதற்காக பவன் கல்யாண் நேற்று மாலை திருப்பதி வந்தார்.
அலிபிரி நடைபாதை வழியாக மலைக்கு நடந்து சென்றார். பவன் கல்யாணை கண்ட ஏராளமான பக்தர்கள் உற்சாகமடைந்து கோஷங்களை எழுப்பி வரவேற்றனர்.
அப்போது பவன் கல்யாண் போலீஸ் அதிகாரிகளிடம் நடைபாதையில் சிறுத்தை தாக்கி இறந்த லக்ஷிதா மற்றும் காயமடைந்த சிறுவன் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் அலிபிரி நடைபாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நடைபாதையில் வந்த பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து நடைபாதையில் உள்ள கடைசி படிக்கட்டில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்தார். தரையில் படுத்து வணங்கினார்.
பின்னர் விருந்தினர் மாளிகையில் தனது மகன் அகிரா நந்தன், மகள் ஆத்யா, திரைப்பட இயக்குனர் திரிவிக்ரம் ஆகியோருடன் இரவு தங்கினார். இன்று காலை 8 மணிக்கு மாத்ரு ஸ்ரீ தரி கொண்டா வெங்கமாம்பாவை தரிசனம் செய்தார்.
பின்னர் குடும்பத்தினருடன் சென்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையான தரிசனம் செய்து லட்டு பரிகார விரதத்தை நிறைவு செய்தார்.
இதனை தொடர்ந்து லட்டுக்கு பரிகார பூஜைகளை செய்தார். அன்னதான கூடத்திற்கு சென்று அன்னதானம் தரமான பொருட்களைக் கொண்டு சுவையாக தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். பவன் கல்யாண் வருகையையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சுப்பராயுடு தலைமையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பவன் கல்யாண் செய்தியாளர்களை சந்தித்தார்.
லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறவில்லை.
விசாரணையின் போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தான் நீதிபதிகள் அவ்வாறு கூறியிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்.நெய் கலப்படம் குறித்த ஆய்வக அறிக்கையில் இடம்பெற்றுள்ள தேதிகளில் சில குழப்பங்கள் இருப்பதாக நீதிபதிகள் கூறினார்கள்.
இது குறித்து தெளிவு படுத்தப்படும்.மேலும் கடந்த 5 ஆண்டுகளில் லட்டு மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த விதிமீறல்களை முன்னெடுத்துக் கொண்டு செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.