இந்தியா

ம.பி.யில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பலி - ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

Published On 2023-05-10 00:19 GMT   |   Update On 2023-05-10 00:19 GMT
  • மத்திய பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.
  • விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

போபால்:

மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் இருந்து இந்தூர் நோக்கி பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. பஸ்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 50 பேர் பயணம் செய்தனர்.

கர்கோன் மாவட்டத்தின் டோங்கர்கான் பகுதியில் உள்ள போரட் ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பஸ் ஆற்றுப்பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு வறண்டுபோன போரட் ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்தது.

விபத்து குறித்த தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர். 3 சிறுவர்கள் உள்பட 23 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் சுமார் 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளர்.

இதுதொடர்பாக, பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கர்கோனில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News