வருகிற 8-ந்தேதி ஆந்திராவில் பிரதமர் மோடி ரோடு-ஷோ
- விசாகப்பட்டினத்தில் ரெயில்வே மண்டலம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுகிறார்.
- கிருஷ்ணாபட்டினத்தில் 2,500 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,518 கோடி மதிப்பில் தொழில் மையம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.
திருப்பதி:
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 8-ந் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வருகிறார். பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர்கள், பல்வேறு துறை அதிகாரிகள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையடுத்து விசாகபட்டினத்தில் சம்பத் விநாயகா கோவிலிலிருந்து ஆந்திர பல்கலைக்கழகம் சபா வேதிகா சாலையில் ரோடு ஷோ நடத்துகிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வாகன நிறுத்தம் மற்றும் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து விசாகப்பட்டினத்தில் ரெயில்வே மண்டலம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுகிறார். அனக்கா பள்ளி மாவட்டம், நக்கப்பள்ளி, புதி மடகாவில் ரூ.65, 370 கோடி மதிப்பில் மூன்று கட்டங்களாக ஒருங்கிணைந்த பசுமை ஹைட்ரோ மையம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.
இதேபோல் 2001 ஏக்கரில் ரூ.1,876.66 கோடி மதிப்பில் மொத்த மருந்து பூங்கா மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன்மூலம் 54000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து கிருஷ்ணாபட்டினத்தில் 2,500 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,518 கோடி மதிப்பில் தொழில் மையம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க மாநில தலைவர் புரந்தரேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.