இந்தியா

சுரங்கத்தில் சிக்கியவர்களுடன் உரையாடிய பிரதமரின் முதன்மை செயலர்

Published On 2023-11-27 10:15 GMT   |   Update On 2023-11-27 10:20 GMT
  • பல சவால்களுக்கு இடையே போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் தொடர்கின்றன
  • பி.கே. மிஷ்ரா, சிக்கிய தொழிலாளர்களுடன் தொலைத்தொடர்பு வழியாக உரையாடினார்

உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தின் உத்தரகாசி (Uttarakashi) மாவட்டத்தில் மழை, வெயில், பனி, மலைச்சரிவு என அனைத்துவிதமான இயற்கை மாறுதல்களினால் ஏற்படும் பருவகால மாற்றங்களால் தடைபடாமல் மக்கள் பயணிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்படும் பணிகள் நடந்து வந்தன.

இதன் ஒரு பகுதியாக, எண் 134 தேசிய நெடுஞ்சாலையின் (NH-134) கடைசியில் யமுனோத்ரிக்கு அருகே அவ்வாறு அமைக்கப்பட்டு வந்த ஒரு நீண்ட சாலையில் சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது.

கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இந்த சில்க்யாரா சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இதில் சுரங்கத்தின் உள்ளே பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணியை போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கம் முடுக்கி விட்டது.

மீட்பு பணிக்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆட்களை கொண்டு, இயந்திர உதவி இல்லாமல், துளையிட்டு மீட்கும் முயற்சி துவங்கியுள்ளது.

இதற்கிடையே, மலைப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்பட கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அங்கு ஏற்கெனவே வெப்பம் 4 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாக உள்ளது. இது அந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரை மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரையும் கவலை கொள்ள செய்தது.

இந்நிலையில், உள்ளே சிக்கியுள்ள பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நம்பிக்கை தரும் விதமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளர் (principal secretary) பிரமோத் குமார் மிஷ்ரா (P.K. Mishra) இன்று அங்கு வருகை தந்தார்.


மிஷ்ரா அங்கு நடைபெறும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார். தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள உணவு, மருந்து பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட விவரங்களை குறித்து கொண்டார்.

அது மட்டுமின்றி, சிக்கிய தொழிலாளர்களிடம் பி.எஸ்.என்.எல். (BSNL) தரைவழி தொலைத்தொடர்பு சாதனம் வழியாக சிறிது நேரம் உரையாடினார். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் மீட்பு நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருவதாக கூறினார்.

துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் சிக்கி கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியே வருவதை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News