வீடு புகுந்து குழந்தைகள் கடத்தல்... மர்மகும்பலை சுட்டுபிடித்தது காவல்துறை
- குழந்தைகள் மழலையர் பள்ளியில் இருந்து வரும்வரை காத்திருந்து தங்களது திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்.
- தாக்குதலை தடுத்து நிறுத்த கடத்தல்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
பெங்களூரு:
கர்நாடகாவில் வீட்டிற்குள் புகுந்து விளையாடிக்கொண்டிருந்த 2 குழந்தைகளை மர்மநபர்கள் கடத்திச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்க்கும் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலகாவியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் இரண்டு பேர் வீட்டிற்குள் ஓடிச்சென்று 3 மற்றும் 4 வயதுடைய குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு ஓடுகின்றனர். அப்போது அவர்களுக்காக காத்திருந்த காரில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று விடுகின்றனர்.
முன்னதாக, குழந்தைகள் கடத்துவதற்கு திட்டமிட்ட 2 பேரும் குழந்தைகள் மழலையர் பள்ளியில் இருந்து வரும்வரை காத்திருந்து தங்களது திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்.
குழந்தைகளின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் தொழில் போட்டி காரணமாக குழந்தைகள் கடத்தப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், குழந்தைகளை கடத்தியவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
குழந்தைகள் கடத்தப்பட்டது தொடர்பாக உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசார் சிசிடிவி-யில் பதிவான வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து காரை போலீசார் மடக்கினர். அப்போது அந்த மர்மகும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. தாக்குதலை தடுத்து நிறுத்த கடத்தல்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவத்தில் 2 போலீசார் காயம் அடைந்தனர். இருப்பினும் போலீசார் குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.