இந்தியா

100 ஒலிம்பிக் பதக்கங்களை விட அரசியல் அதிகாரம் பெரியது - வினேஷ் போகத் பளிச்

Published On 2024-09-18 09:50 GMT   |   Update On 2024-09-18 09:50 GMT
  • தான் அரசியலுக்கு வந்தது ஏன் என்று வினேஷ் போகத் விளக்கம் அளித்துள்ளார்
  • ஒலிம்பிக்கசில் இறுதிசுற்று வரை முன்னேறிய பின் எடை விஷயத்தில் 1 கிலோ வரை விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

மல்யுத்த வீராங்கனையாக இருந்த வினேஷ் போகத் 2024 பாரீஸ் ஒலிம்பிக்சில் இறுதி சுற்று வரை சென்று 100 கிராம் எடை அதிகரித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து தனது ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் நாடு திரும்பிய நிலையில் சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். மேலும் எதிர்வரும் அரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் வேட்பாளராக வினேஷ் போகத் களமிறங்கியுள்ளார்.

முன்னதாக பாஜக முன்னாள் எம்.பியும் மல்யுத்த சம்மேலன தலைவராகவும் இருந்த பிரிஜ் பூஷன் சிங், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் வீரர்- வீராங்கனைகள் கடந்த வருட தொடக்கத்தில் இருந்து 6 மாத காலமாக போராடினர். இறுதியாக பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் வினேஷ் போகத் முக்கிய பங்காற்றினார். வினேஷ் போகத்தின் தகுதி நீக்கமும் இதனை மனதில் வைத்து நடந்த அரசியல் சதியே என்ற கருத்தும் பலர் மத்தியில் நிலவி வருகிறது.

 

இந்நிலையில் வினேஷ் போகத் காங்கிரசில் சேர்ந்தை சுட்டிக்காட்டிய பிரிஜ் பூஷன் உள்ளிட்ட பாஜவினர், முன்னதாக அவர் நடத்திய போராட்டம் அரசியல் லாபத்துக்காகவே என்று முத்திரை குத்தினர். வினேஷ் போகத் அரசியலுக்கு சென்றிருக்கக்கூடாது என்று அவரின் உறவினர் மகாவீர் சிங் போகத், சக வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்ளிட்டோரும் அபிப்பிராயம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் அரசியலுக்கு வந்தது ஏன் என்று வினேஷ் போகத் விளக்கம் அளித்துள்ளார் . தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய வினேஷ் போகத், நீங்கள் அதிகாரத்தில் இல்லாவிட்டால் இங்கு எதுவும் செய்ய முடியாது. ஒலிம்பிக்சில் நீங்கள் நூற்றுக்கணக்கான பதங்கங்களை வெல்லலாம். ஆனால் அது அரசியல் அதிகாரத்துக்கு ஈடாகாது. ஒரே இரவில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது மொத்த நாடும் முடங்கியது. அதுவே அரசியல் அதிகாரத்தின் சக்தி. பிரிஜ் பூஷனும் அந்த அரசியல் அதிகாரத்தை வைத்தே தப்பித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் ஒலிம்பிக்கசில் இறுதிசுற்று வரை முன்னேறிய பின் எடை விஷயத்தில் 1 கிலோ வரை விலக்கு அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக பெண்கள் பிரிவில் இது அவசியம். ஏனெனில் பெண்கள் உடலும் ஆண்கள் உடலும் ஒரே மாதிரியானது அல்ல என்றும் வினேஷ் போகத் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News