ஐதராபாத் ஜெயிலில் தற்கொலை செய்து கொள்ள ஆணிகளை விழுங்கிய கைதி
- சாரலப்பள்ளியில் உள்ள ஜெயிலில் முகமது ஷேக் என்ற கைதி அடைக்கப்பட்டு உள்ளார்.
- ஜெயில் வார்டன் முகமது ஷேக்குக்கு ஜெயில் டாக்டரிடம் சிகிச்சை அளித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சாரலப்பள்ளியில் உள்ள ஜெயிலில் முகமது ஷேக் (வயது 32) என்ற கைதி அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
இதனை அறிந்த ஜெயில் வார்டன் முகமது ஷேக்குக்கு ஜெயில் டாக்டரிடம் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் வயிற்று வலி குறையவில்லை.
இதையடுத்து முகமது ஷேக்கை ஐதராபாத்தில் உள்ள காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் முகமது ஷேக் வயிற்றை டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர்.
இதில் முகமது ஷேக்கின் வயிற்றில் ஆணிகள் இருப்பது தெரியவந்தது. இரப்பை குடல் துறை தலைவர் டாக்டர் ஷ்ரவன் குமார் தலைமையிலான டாக்டர்கள் முகமது ஷேக் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் 45 நிமிடங்களில் 5 அங்குலம் நீளமுள்ள 9 ஆணிகளை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து கைதியிடம் விசாரித்த போது அவர் தற்கொலை செய்துவதற்காக ஆணிகளை விழுங்கியதாக தெரிவித்தார்.