நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை... பஞ்சாப் சட்டசபை கூட்டத்திற்கான உத்தரவை திரும்ப பெற்றார் ஆளுநர்
- ஆளுநரின் முடிவால் ஆம் ஆத்மி அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
- ஜனநாயகம் முடிந்துவிட்டதாக அரவிந்ந் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
சண்டிகர்:
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில், பாஜக தனது ஆபரேசன் தாமரை திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருவதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை இழுக்க பேரம் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. மேலும் பாஜகவின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் நாளை ஆம் ஆத்மி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் மாநில முதலமைச்சர் பகவந்த் மான்.
நாளை சட்டசபை சிறப்பு அமர்வை கூட்டுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து, ஆளுநர் மூலம் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால், சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென திரும்ப பெற்றார். சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கு குறிப்பிட்ட விதிகள் இல்லாததால் உத்தரவு திரும்ப பெறப்படுவதாக ஆளுநர் கூறியிருக்கிறார். இந்த முடிவால் ஆம் ஆத்மி அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், 'அமைச்சரவை கூட்டிய கூட்டத்தை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்? எனவே, இப்போது ஜனநாயகம் முடிந்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன் கூட்டத் தொடரை நடத்துவதற்கு ஆளுநர் அனுமதி வழங்கினார். ஆபரேசன் தாமரை தோல்வியடையத் தொடங்கி, ஆதரவு கிடைக்காததால், சட்டசபை கூட்டத்தொடருக்கான அனுமதியை திரும்பப் பெறுமாறு மேலிடத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது' என்றார்.