பங்குச்சந்தை தொடர்பான ராகுல் காந்தி குற்றச்சாட்டு ஆதாரமற்றது: பியூஷ் கோயல்
- இந்தியா இன்று 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
- தற்போது நமது சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளால் பங்குச்சந்தையில் ரூ.38 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. எனவே இதுகுறித்து விரிவான விசாரணை தேவை என கோரியிருந்தார்.
இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவரான பியூஷ் கோயல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பங்குச்சந்தை முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்த சதி செய்கிறார். முதலீட்டாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார். பங்குச்சந்தை தொடர்பான ராகுல் காந்தி குற்றச்சாட்டு ஆதாரமற்றவை.
இந்தியா இன்று 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. மோடி அரசாங்கத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக நமது சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
இந்தியாவின் பங்குச்சந்தை உலகின் முதல் 5 பொருளாதாரங்களின் சந்தை மூலதனத்தில் நுழைந்துள்ளது. மோடி அரசாங்கத்தின் கீழ் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை மூலதனம் 4 மடங்கு அதிகரித்துள்ளது என்பதை நாம் அறிவோம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது அப்போது இந்தியாவின் சந்தை மதிப்பு ரூ.67 லட்சம் கோடியாக இருந்தது. இன்று சந்தை மதிப்பு ரூ.415 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.