வரதட்சணைக்கு எதிராக என்ஜினீயர் செய்த செயல்... குவியும் பாராட்டுக்கள்
- ஜாகரின் தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட சமூக நீதி பிரச்சினைகளுக்கு எதிரானவர்களாக திகழ்ந்துள்ளனர்.
- அனிதாவை அவரது பெற்றோர்கள் நன்றாக படிக்க வைத்தது மிகப்பெரிய சொத்து என்கிறார் ஜாகர்.
வரதட்சணை வாங்குவது சட்டப்படி தவறு. வரதட்சனையை தடுக்க சட்டங்களும் உள்ளன. ஆனாலும் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்கள் சித்ரவதை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் ராஜஸ்தானில் ஒரு வாலிபர், ஒரு தேங்காய் மட்டும் வரதட்சணையாக வாங்கியிருப்பது பேசு பொருளாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெய் நாராயண் ஜாகர். இவர் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் அனிதா வர்மா என்ற முதுகலை பட்டம் பெற்ற பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.
ஜாகரின் தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட சமூக நீதி பிரச்சினைகளுக்கு எதிரானவர்களாக திகழ்ந்துள்ளனர். அவர்களை பின்பற்றி ஜாகரும், அனிதா வர்மா குடும்பத்தினரிடம் ஒரு ரூபாய் மற்றும் ஒரு தேங்காய் பெற்றுக்கொண்டு அனிதாவை திருமணம் செய்துள்ளார்.
இதுபற்றி ஜாகர் கூறுகையில், அனிதாவை அவரது பெற்றோர்கள் நன்றாக படிக்க வைத்தது மிகப்பெரிய சொத்து. எனது மனைவி அரசு வேலைக்கு தகுதி பெற்றால் முதல் ஒரு வருட சம்பளம் முழுவதையும் அவரது பெற்றோருக்கே கொடுக்க வேண்டும் என உறுதி அளித்துள்ளேன் என்றார். அவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.