2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை நீக்கம்
- தடை நீக்கப்பட்டதால் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- காலப்போக்கில் ஆந்திர மாநிலத்தில் கருவுறுதல் விகிதம் குறைந்து விட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 1994-ம் ஆண்டு 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டது. அவர்களை போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவும் சட்டம் இயற்றப்பட்டது.
காலப்போக்கில் ஆந்திர மாநிலத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துவிட்டது. அதே நேரத்தில், முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது மாநிலத்தில் மொத்த குழந்தைகள் பிறப்பு விகிதம் 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் வருங்காலத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால் மாநிலங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
தென் மாநில மக்கள் அதிக அளவில் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் ஆந்திர மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை நீக்கப்படும் எனவும் அறிவித்தார்.
இந்நிலையில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்து நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்ய முன்மொழியப்பட்ட மசோதாக்கள் நேற்று ஆந்திர சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தடை நீக்கப்பட்டதால் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் இந்த சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.