காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: கருத்து வேறுபாட்டால் இந்தியா கூட்டணியில் மீண்டும் மோதல்
- இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இதில் முரண்பட்டுள்ளார்.
- சிவசேனா போல ஆம் ஆத்மி கட்சியும் காஷ்மீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் உள்ளது.
புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. பாரதிய ஜனதா கட்சி இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது.
ஆனால் காங்கிஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தலைவர்களில் பலர் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ், தி.மு.க. தலைவர்கள் கூறுகையில், 'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம்' என்று கூறி உள்ளனர்.
இந்நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இதில் முரண்பட்டுள்ளார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டிருந்த 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை வரவேற்கிறோம். விரைவில் காஷ்மீரில் தேர்தல் வைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
சிவசேனா போல ஆம் ஆத்மி கட்சியும் காஷ்மீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் உள்ளது. அந்த கட்சி சார்பில் இதுவரை எந்த எதிர்ப்பு கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.
இதன் காரணமாக இந்தியா கூட்டணி தலைவர்கள் இடையே மீண்டும் கருத்து வேறுபாடுகள் உருவாகி உள்ளன. முக்கிய கொள்கை விஷயங்களில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒருமித்த கருத்துக்கு வர முடியாமல் திணறுவதை இது காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் வருகிற 19-ந் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
குறிப்பாக காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று இந்தியா கூட்டணி சார்பில் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு தலைவர்களின் கூட்டறிக்கையாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு தொகுதி பங்கீட்டை ஆரம்பிக்கவும் 19-ந் தேதி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.