லாக்கர் "செம்ம ஸ்ட்ராங் பா..."- வங்கியில் பாராட்டு கடிதம் எழுதி வைத்த முகமூடி கொள்ளையன்
- முகமூடி கொள்ளையன் வங்கி முழுவதும் நகை பணம் ஏதாவது உள்ளதா என தேடி பார்த்தார்.
- முகமூடி கொள்ளையன் எழுதி வைத்த கடிதத்தை வங்கி அதிகாரிகள் படித்து பார்த்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நென்னல் நகரப் பகுதியில் கிராமப்புற வங்கியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. தனியாக வீடு வாடகை எடுத்து அதில் வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வங்கியின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார். லாக்கர் அறைக்கு சென்ற முகமூடி கொள்ளையன் அங்குள்ள லாக்கரை திறக்க முயன்றார். அவரால் லாக்கரை திறக்க முடியவில்லை. பின்னர் லாக்கரை உடைக்க முயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை.
இதையடுத்து முகமூடி கொள்ளையன் வங்கி முழுவதும் நகை பணம் ஏதாவது உள்ளதா என தேடி பார்த்தார். எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த முகமூடி கொள்ளையன் சிரமப்பட்டு கதவை உடைத்து வந்தும் எதுவுமே கிடைக்கவில்லையே என வருத்தம் அடைந்தார்.
பின்னர் வங்கியில் இருந்த ஒரு பேப்பரை எடுத்து ஸ்கெட்ச் பேனா மூலம் இந்த வங்கியில் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என்னை தேட வேண்டாம் என்னுடைய கைரேகை எதுவும் இங்கு பதிவு ஆகி இருக்காது.
இது ஒரு நல்ல வங்கி என அதிகாரிகளுக்கு தெலுங்கில் பாராட்டு கடிதம் எழுதிவிட்டு சென்றார். நேற்று காலை வங்கி திறக்க வந்த அதிகாரிகள் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வங்கியின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் திறக்கப்படாமல் இருந்ததை கண்ட அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பின்னர் முகமூடி கொள்ளையன் எழுதி வைத்த கடிதத்தை வங்கி அதிகாரிகள் படித்து பார்த்தனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து முகமூடி கொள்ளையனை தேடி வருகின்றனர்.