வாஷிங் மெஷினில் கட்டுக்கட்டாக பணத்தை அடுக்கி கடத்தல்: ரூ.1.30 கோடி பறிமுதல்
- மொத்தம் 6 வாஷிங் மெஷின்களில் ரூ.1.30 கோடி இருந்தது.
- பணத்தை விஜயவாடாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்ய அனுப்பி வைத்ததாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.
இந்த கடையில் இருந்து விஜயவாடாவுக்கு லோடு ஆட்டோவில் 6 வாஷிங் மெஷின்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு ஹவாலா பணம் கடத்தி செல்வதாக விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த வாஷிங் மெஷின்கள் சீல் பிரிக்காமல் இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாஷிங் மெஷின்களை திறந்தனர். அதில் கட்டு கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 6 வாஷிங் மெஷின்களில் ரூ.1.30 கோடி இருந்தது.
பணம் மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தசரா பண்டிகைக்கு எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட பணத்தை விஜயவாடாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்ய அனுப்பி வைத்ததாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
இருப்பினும் பணத்திற்கு உண்டான உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.