பெங்களூருவில் ரெயில் நிலையத்தில் ரூ.25 கோடி அமெரிக்க டாலர் சிக்கியது துப்புரவு தொழிலாளி போலீசில் ஒப்படைத்தார்
- பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- பணம் உண்மையான அமெரிக்க டாலரா? அல்லது கலர் ஜெராக்ஸா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தை சேர்ந்தவர் சுலைமான் ஷேக். இவர் பெங்களூருவில் குப்பை அள்ளும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 1-ந் தேதி இவர் நாகவாரா ரெயில் நிலையத்தில் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களை சேகரித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு கருப்பு பை கிடந்தது. பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அதை யாருக்கும் தெரியாமல் தனது அறைக்கு எடுத்து சென்றார்.
மேலும் அதிகளவில் இருந்த பணத்தை பார்த்து அச்சமடைந்த சுலைமான் சேட் இதுகுறித்து தான் வேலைபார்க்கும் முதலாளி பாப்பா என்பவரை சந்தித்து இதுகுறித்து தெரிவித்தார். மேலும் அந்த பணத்தையும் சுலைமான் ஷேக் எடுத்து காட்டினார். இதை பார்த்து பாப்பாவும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர்கள் இதுகுறித்து சமூக ஆர்வலர் கலீமுல்லா என்பவரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் சுலைமான் ஷேக் மற்றும் பாப்பா ஆகியோரை பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் போலீசார் அந்த கரன்சி நோட்டுகளை ஆய்வு செய்தபோது அது அமெரிக்க டாலர்கள் என்றும், இந்திய மதிப்பில் ரூ.25 கோடி என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் தயானந்தா, ஹெப்பால் போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர்கள் இந்த பணம் உண்மையான அமெரிக்க டாலரா? அல்லது கலர் ஜெராக்ஸா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பணத்துடன் ஒரு கடிதம் இருந்தது. அதில் இந்த பணத்தை நல்ல காரியத்துக்கு பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே அது உண்மையான பணமாக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
எனவே பெங்களூருவில் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்க டாலர்கள் உண்மையானதா என்பதை கண்டறிய டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே அங்கிருந்து வரும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.