புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.25,000 - கர்நாடக அரசு
- நிலையான வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலில் இறங்கப் பலர் யோசிக்கின்றனர்.
- அவர்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு இந்த மாதாந்திர உதவித்தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஸ்டார்ட் அப்களை கொண்ட நகரமாக பெங்களூரு இருந்து வருகிறது. தங்களின் வருமானம் தருகின்ற நிலையான வேலையை உதறிவிட்டு ஸ்டார்ட் அப் தொடங்க பலர் ஆர்வமாக முன்வருகின்றனர். இதை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய திட்டமானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பேசுகையில், புதிய தொழில்களைத் தொடங்குவது என்பது ஒரு ஆபத்தான சமாச்சாரம். அதுவும் நிலையான வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலில் இறங்கப் பலர் யோசிக்கின்றனர்.
புதிய தொழில் தொடங்குவதால் பல சமயங்களில் பொருளாதார சிக்கல்களில் அவர்கள் மாட்டிக்கொள்கின்றனர். எனவே அவர்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு இந்த மாதாந்திர உதவித்தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது புதிதாகத் தொழில்முனைவோர் அன்றாட செலவுகளைப் பற்றி யோசிக்காமல் தொழிலை வளர்ப்பதில் கவனம் செலுத்த உதவும்.
ஆனால் இந்த திட்டம் எந்த அளவு வெற்றி பெறுகிறது என்பதை அது செயல்படுத்தப்பட்ட பிறகே பார்க்க முடியும். உதவித்தொகை உரிய தகுதியின் அடிப்படையிலேயே வழங்கப்படும். யாருக்கு அதிகம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இது சென்று சேர வேண்டும். இதைத்தவிர்த்து தொழில் சார்ந்த அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.