ஊழலுக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரதம்: போட்டியாக வீடியோ வெளியிட்டு அசோக் கெலாட் அதிரடி
- அசோக் கெலாட்டுக்கு எதிராக முன்னணி ஒன்றை சச்சின் பைலட் தொடங்கினார்.
- சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
ஜெய்ப்பூர் :
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் என இரு தலைவர்களிடையேயான மோதலில் காங்கிரஸ் கட்சி, சிக்கித்தவிக்கிறது.
2018 சட்டசபை தேர்தலுக்குப்பின் முதல்-மந்திரி பதவியை இளம் தலைவர் சச்சின் பைலட் எதிர்பார்த்தார். ஆனால் அந்தப் பதவி, கட்சியின் மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு கிடைத்தது. அதில் இருந்தே அவருடன் சச்சின் பைலட் மோதி வருகிறார். இந்த மோதல் போக்கு, கட்சித்தலைமையின் தலையீட்டால் அவ்வப்போது சற்றே தணிவதும், பின்னர் மீண்டும் அனல் வீசுவதும் தொடர்கிறது.
இந்த ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அசோக் கெலாட்டுக்கு எதிராக முன்னணி ஒன்றை சச்சின் பைலட் தொடங்கினார். அத்துடன் முந்தைய முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த அசோக் கெலாட் அரசை வலியுறுத்தி 11-ந் தேதி ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவேன் எனவும் அவர் அதிரடியாக அறிவித்தார்.
இதற்காக அவருக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா எச்சரிக்கை விடுத்தார். மாநில அரசுக்கு எதிரான இத்தகைய போராட்டம், கட்சி விரோத நடவடிக்கை, கட்சியின் நலன்களுக்கு எதிரானது என எச்சரித்தார்.
ஆனாலும் சச்சின் பைலட் அதைப் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி ஜெய்ப்பூரில் வரலாற்றுச்சிறப்பு மிக்க போர் நினைவுச்சின்னமான 'ஷாகீத் ஸ்மாரக்'கில் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினார்.
வரவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதால், இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடந்த இடத்துக்கு ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. ஆனால் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு போட்டி நடவடிக்கை போல 2030-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தான் மாநிலத்தை முன்னணி மாநிலமாக உயர்த்துவதற்கான தொலைநோக்குப்பார்வை வீடியோவை அசோக் கெலாட் அதிரடியாக வெளியிட்டார்.
இந்த வீடியோவில் அவர், " 2030-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தானை முன்னணி மாநிலமாக ஆக்குவதற்கு நான் தீர்மானித்துள்ளேன். இந்தக் கனவை நனவாக்குவதற்காக, கடந்த 4 ஆண்டுகளாகவும், இந்த ஆண்டும் தாக்கல் செய்த பட்ஜெட்டுகளில் பிற எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை அறிவித்து இருக்கிறேன்" என கூறி உள்ளார். தான் அமல்படுத்தி உள்ள சிரஞ்சீவி சுகாதார காப்பீடு, சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம், ரூ.10 லட்சம் விபத்துக்காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அசோக் கெலாட், சச்சின் பைலட் மோதல் மீண்டும் வெளிப்படையாக வெடித்திருப்பது, தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.