115 நாள் அவகாசம் கேட்டு 30 மணி நேரத்தில் தேர்தல் பத்திர தரவுகளை கொடுத்த எஸ்.பி.ஐ: பிரசாந்த் பூஷன்
- தேர்தல் பத்திர விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்துள்ளது.
- பாரத ஸ்டேட் வங்கியின் நடவடிக்கைகளை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் விமர்சித்துள்ளார்.
வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
தேர்தல் நன்கொடை பத்திர முறையை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்களின் முழு விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி பகிர வேண்டும். அவற்றை மார்ச் 13ம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காக தேர்தல் ஆணையம் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதனையடுத்து 2019 ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்து தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இன்று மாலைக்குள் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில், தேர்தல் பத்திர விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்துள்ளது.
இது தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கியின் நடவடிக்கைகளை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்க 115- நாள்கள் அவகாசம் கேட்ட SBI உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு 30 மணி நேரத்தில் வழங்கியிருக்கிறது. அப்படி எதை மறைக்க முற்பட்டது என்பதை மார்ச் 15 ஆம் தேதி வரை காத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.