இந்தியா

அமிர்தசரசில் பொற்கோவில் அருகே மீண்டும் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு- ஒருவர் காயம்

Published On 2023-05-08 09:58 GMT   |   Update On 2023-05-08 09:58 GMT
  • பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அமைந்துள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் அமிர்தசரசில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அமைந்துள்ளது. நேற்று இதன் அருகே உள்ள ஹெரிட்டேஜ் தெருவில் மர்ம பொருள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியது.

இது பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்ற பீதி பொதுமக்கள் மத்தியில் நிலவியது. ஆனால் இது குண்டு வெடிப்பு அல்ல. ஒரு ஓட்டலில் கியாஸ் கசிவால் ஏற்பட்டது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் நேற்று சம்பவம் நடந்த ஹெரிடேஜ் தெருவில் மீண்டும் மர்மபொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த வெடிச்சத்தம் அருகில் உள்ள பகுதிக்கும் கேட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

வெடித்த மர்மபொருள் என்னவென்று தெரியவில்லை. அதன் மாதிரியை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் ஒருவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் அமிர்தசரசில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News