ஷேக் ஹசீனா விவகாரம்: 2 வங்கதேச தூதர்கள் பணி நீக்கம்
- முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்றார்.
- ஷேக் ஹசீனாவை இந்தியா வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்,
புதுடெல்லி:
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதையடுத்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்றார். ஷேக் ஹசீனாவை இந்தியா வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் உள்ள 2 வங்கதேச தூதர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுடெல்லியில் உள்ள வங்காள தேசத்தின் உயர் அலுவலகத்தில் பணியாற்றும் செயலாளர் ஷபான் மஹ்மூத் தனது ஒப்பந்தம் முடிவதற்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வங்கதேச இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது.
இதே போல கொல்கத்தாவில் உள்ள வங்காளதேசத்தின் தூதரகத்தின் முதன்மை செயலாளர் ரஞ்சன்சென் என்பவரும் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவருக்கு 2026-ம் ஆண்டு வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஷேக் ஹசீனா அரசாங்கத்தால் பணி நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் இவர் மீது குற்றாச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.