இந்தியா

சபரிமலையில் அரவணை தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை- தேவசம்போர்டு தகவல்

Published On 2024-06-08 07:32 GMT   |   Update On 2024-06-08 07:32 GMT
  • தற்போது வன மேம்பாட்டுக் கழகத்தின் ஆர்கானிக் ஏலக்காய்களைப் பயன்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது.
  • யாத்திரை சீசனுக்கு மட்டும் மொத்தம் 40 லட்சம் கிலோ வெல்லம் தேவைப்படுகிறது.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாதந்தோறும் நடை திறக்கப்படும் நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலையில் முக்கிய பண்டிகை காலமான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. கடந்த ஆண்டு இந்த காலங்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதம் தட்டுப்பாடு ஏற்பட்டது. வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் கிடைக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தற்போதே வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் பெறுவதற்கான பணிகள் நடைபெற்றன. பிரசாதம் தயாரிப்பதற்கு தேவையான 19 மூலப்பொருட்களுக்கான டெண்டர் கோருவதற்கான நடைமுறைகள் ஏப்ரல் மாதம் தொடங்கி, அவற்றில் 16 பொருட்களின் ஏலம் தற்போது முடிவடைந்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

ஏலக்காய்களில் அதிகபட்ச எச்ச அளவு (எம்.ஆர்.எல்.) அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பது கடந்த காலங்களில் கண்டறியப்பட்டதையடுத்து, தேவசம் போர்டு 'அரவணா' விற்பனை செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் வாரியத்துக்கு ரூ.6.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இது போன்ற நிதி இழப்பு மற்றும் சர்ச்சைகளைத் தவிர்க்க, தற்போது வன மேம்பாட்டுக் கழகத்தின் ஆர்கானிக் ஏலக்காய்களைப் பயன்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் யாத்திரை சீசனுக்கு மட்டும் மொத்தம் 40 லட்சம் கிலோ வெல்லம் தேவைப்படுகிறது. இதனை மகாராஷ்டிராவை சேர்ந்த ஏஜென்சி ஒன்று கடந்த ஆண்டை விட குறைந்த விலையில் வழங்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது.

இதன் காரணமாக இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு சீசனின் போது அரவணை தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News