ஐதராபாத் விமான நிலையத்தில் சூட்கேஸ் கைப்பிடி தங்கத்தில் செய்து நூதன முறையில் கடத்தல்
- சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக பயணிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
- சூட்கேஷின் கைப்பிடிகளை பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஐதராபாத்:
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தங்கம் விலை உயர்ந்த போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர்.
கடத்தல் பொருட்களை தடுக்கும் விதமாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை முழுவதுமாக சோதனை செய்து வருகின்றனர்.
சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக பயணிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். ஒரு சிலர் போதை பொருட்களை டியூப் மாத்திரை வடிவில் விழுங்கியும், ஒரு சிலர் தங்கங்களை வாட்ச், தலைமுடி, ஷூ உள்ளிட்டவைகளில் வைத்தும் கடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வெளிநாட்டில் இருந்து பயணி ஒருவர் விமானத்தின் மூலம் ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்தார். அவர் கொண்டு வந்த சூட்கேசில் இருந்த பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சூட்கேஸில் எந்தவிதமான கடத்தல் பொருட்களும் இல்லை. சூட்கேஷின் கைப்பிடிகளை பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சூட்கேசின் கைப்பிடி மற்றும் ஸ்க்ரூக்கள் தங்கத்தில் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அவர் நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.