இந்தியா

வந்தே பாரத் ரயில் மீது திடீர் கல்வீச்சு தாக்குதல் - காரணம் என்ன தெரியுமா?

Published On 2023-05-01 20:20 GMT   |   Update On 2023-05-01 20:20 GMT
  • ஏப்ரல் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார்.
  • வந்தே பாரத் ரயிலுக்கு அடுத்த 15 நாட்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தின் மல்லப்புரம் மாவட்டத்தில் திருநவ்யா மற்றும் திருர் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாக்குதல்காரர்கள் ரயிலின் சி4 பெட்டி மீது கற்களை வீசி கடுமையாக தாக்கினர். இதில் ரயிலின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மல்லப்புரம் காவல் துறை விசாரணையை துவங்கி, அந்த பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. ரயில்வே காவல்துறையும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்பவம் நடைபெற்ற பகுதியின் கள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் தெற்கு ரயில்வே வந்தே பாரத் ரயிலுக்கு அடுத்த 15 நாட்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தான் பிரதமர் நரேந்தி மோடி திருவணந்தபுரம் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார். மல்லப்புரம் மாவட்டத்தின் திருர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நிற்க வலியுறுத்தி ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. முந்தைய அறிவிப்பின் போது வந்தே ரயில் திருரில் நின்று செல்லும் என்றே கூறப்பட்டது. எனினும், இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு திருரில் வந்தே பாரத் ரயில் நிற்காது என்று அறிவிக்கப்பட்டது.

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவத்திற்கு கேரளா மாநிலத்தின் பாஜக தலைவர் கே சுரேந்திரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மல்லப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த சம்பவம் கேரளாவுக்கு அவப்பெயரை கொண்டு சேர்த்துள்ளது. முதல் நாளில் இருந்தே எதிர்ப்புக்குரல் இருந்து வந்தது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்தார்.

Tags:    

Similar News