பள்ளியில் கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த மாணவி பலி: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு
- சமையல் அறையில் இருந்து மதிய உணவுக்காக தயார் செய்யப்பட்டு இருந்த கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தை ஊழியர்கள் வெளியே கொண்டுவந்தனர்.
- மகந்தம்மாவுக்கு 50 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டது.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் கலபுராகி மாவட்டம் அப்சல்பூர் தாலுகா சைனமகேரா கிராமத்தில் சீனமகேரா அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.
கடந்த 16-ந் தேதி இப்பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மகந்தம்மா சிவப்பா ஜமாதார் (7) என்ற சிறுமி தனது சக தோழிகளுடன் பள்ளி நடைபாதையில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது சமையல் அறையில் இருந்து மதிய உணவுக்காக தயார் செய்யப்பட்டு இருந்த கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தை ஊழியர்கள் வெளியே கொண்டுவந்தனர். இதை கவனிக்காத சிறுமி மகந்தம்மா தன்னை துரத்திய மற்றொரு சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்தாள்.
இதில் மகந்தம்மாவுக்கு 50 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு கலபுர்கியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமி மகந்தம்மாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
இதனிடையே சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பவத்தன்று விடுமுறையில் இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை லலாபி நடாப் மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜூ சவான் ஆகியோர் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி மறுநாளே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதேபோல் பள்ளியின் தலைமை சமையல்காரரான கஸ்தூரிபாய் தாளக்கோரி என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.