கோடை வெயிலில் 4 கோடி லிட்டர் 300 வகை பீர் ருசித்த குடிமகன்கள்
- தெலுங்கானாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 28 முதல் 30 லட்சம் பெட்டி பீர் விற்பனை செய்யப்படுகிறது.
- கோடை விடுமுறை மற்றும் திருமண சீசன் காரணமாக பீர் விற்பனை அதிகமாக இருந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்தது. இதிலிருந்து தப்பிக்க மது பிரியர்கள் ஹாட் வகைகளிலிருந்து பீருக்கு மாறினர்.
குடிமகன்களை கவருவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் 300 வகையான பீர் விற்பனைக்கு வந்தன. 650 மில்லி மற்றும் 350 மில்லி என 2 அளவுகளில் பீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் கடந்த மாதம் ஒரு பாட்டில் பீர் ரூ.10 விலையும் குறைக்கப்பட்டது.
இதனால் அனைத்து மது கடைகளிலும் பீர் விற்பனை அதிகரித்தது. குறிப்பாக பிரசித்தி பெற்ற 12 வகையான பீர்கள் அதிக அளவில் வாங்கி குடித்தனர்.
நாளுக்கு நாள் அதிகரித்த வெயில் காரணமாக குடிமகன்கள் பீர் வாங்கி குடித்து பொழுதை கழித்தனர்.
இதனால் இந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் வரலாற்று சாதனையாக 7.4 கோடி பீர் பாட்டில்கள் விற்பனையாகி உள்ளன. மொத்தமாக கணக்கிட்டு பார்த்தால் 4 கோடி லிட்டர் பீர் மது பிரியர்கள் குடித்துள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் அதிகபட்சமாக 7.2 கோடி பாட்டில்கள் விற்பனையாகி இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 28 முதல் 30 லட்சம் பெட்டி பீர் விற்பனை செய்யப்படுகிறது.
கோடை விடுமுறை மற்றும் திருமண சீசன் காரணமாக பீர் விற்பனை அதிகமாக இருந்தது. மேலும் விலை குறைப்பும் விற்பனை அதிகரிப்பு காரணமாக இருந்துள்ளது.
வருங்காலங்களில் மேலும் பீர் விற்பனை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.