இந்தியா

சபரிமலை செல்லும் பக்தர்கள் பூஜை நேரம், போக்குவரத்து வசதிகளை தெரிந்துகொள்ள 'செயலி' அறிமுகம்

Published On 2024-11-14 04:36 GMT   |   Update On 2024-11-14 04:36 GMT
  • பக்தா்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை கேரள அரசுடன் இணைந்து திருவிதாங்கூா் தேவசம்போர்டு செய்து வருகிறது.
  • திருவனந்தபுரத்தில் முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இச்செயலியின் இலச்சினையை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதந்தோறும் நடை திறக்கப்படும் குறிப்பிட்ட சில நாள்களில் நாடெங்கும் இருந்து பக்தா்கள் வந்து தரிசித்து செல்வது வழக்கம். கார்த்திகை மாதம் 1-ந்தேதி (16-ந்தேதி) தொடங்கும் மண்டல பூஜை மற்றும் சிறிய இடைவெளியைத் தொடா்ந்து மகரவிளக்கு யாத்திரை சமயத்தில் லட்சக்கணக்கான பக்தா்கள் சபரிமலையில் திரள்வா்.

கூட்டநெரிசலைத் தடுக்க நிகழாண்டு தினசரி இணைய வழியில் பதிவு செய்த 80,000 பக்தா்களுக்கும் நேரடியாக வரும் 10,000 பக்தா்களுக்கும் மட்டுமே அனுமதியளிக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது. பக்தா்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை கேரள அரசுடன் இணைந்து திருவிதாங்கூா் தேவசம்போர்டு செய்து வருகிறது.

அந்த வகையில், ஏஐ மூலம் பக்தா்களுக்குத் துல்லிய தகவல்களை வழங்கும் சுவாமி ஏஐ சாட் பாட் செயலியை முத்தூட் குழுமத்தின் ஒத்துழைப்போடு பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

திருவனந்தபுரத்தில் முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இச்செயலியின் இலச்சினையை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.

இது தொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'சுவாமி ஏஐ சாட்பாட் செயலியை பக்தா்கள் தங்கள் அறிதிறன் பேசிகளில் நிறுவி, ஏஐ மூலம் உரையாடலில் தகவல்களைக் கேட்டு பெறலாம். பூஜை நேரங்கள், ரெயில் மற்றும் விமான நிலைய வசதிகள் பற்றிய விரிவான தகவல்களை மலையாளம், தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சாட்பாட் வழங்கும்.

இந்த ஆண்டு புனித யாத்திரை காலத்தில் ஐயப்ப பக்தா்களுக்கு மிகவும் வசதியான, துல்லியமான மற்றும் பாதுகாப்பான யாத்திரை அனுபவத்தை சாட்பாட் உறுதி செய்யும். இச்செயலி விரைவில் பக்தா்களின் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News