இந்தியா

கேரளாவில் 15 வயது சிறுமிக்கு வாலிபருடன் கட்டாய திருமணம்- பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2024-04-05 07:53 GMT   |   Update On 2024-04-05 07:53 GMT
  • தனக்கு திருமணம் நடந்துவிட்டது குறித்தும், தனது படிப்பை தொடர உதவ வேண்டும் என்றும் வார்டு கவுன்சிலர் சத்திய பாமாவிடம் சிறுமி கேட்டுள்ளார்.
  • பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் வெள்ளிமடு குன்று பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

திருவனந்தபுரம்:

மதுரையை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி கேரள மாநிலம் கோழிக்கோடு கிழக்குமலை பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளயில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கும், மாங்காவு பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். பள்ளிக்கு சென்று படிக்கவேண்டும் என்ற சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக, வலுக்கட்டாயமாக அவருக்கு திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது.

அவர் தனக்கு திருமணம் நடந்துவிட்டது குறித்தும், தனது படிப்பை தொடர உதவ வேண்டும் என்றும் வார்டு கவுன்சிலர் சத்திய பாமாவிடம் கேட்டுள்ளார். பள்ளி படிக்கும் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்திருப்பதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அவர் சட்ட சேவைகள் ஆணைய தன்னார்வ தொண்டர் ஒருவரின் உதவியை நாடினார். அவர் மூலம் போலீசாரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியை புகார் அளிக்க செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்தபோது சிறுமிக்கு அவரது பெற்றோர் உள்ளிட்டோர் சேர்ந்து கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர், சிறுமியை திருமணம் செய்த வாலிபர், வாலிபரின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது இலத்தூர் போலீசார் வழக்கு பதிந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் வெள்ளிமடு குன்று பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

மேலும் அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும், கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவை முடிந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சிறுமிக்கு கேரளாவில் கட்டாய திருமணம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News