குடிபோதையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற 16 பஸ் டிரைவர்கள் சிக்கினர்
- போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
- பிடிப்பட்டவர்களில் சிலர் கூறும்போது இரவில் மது சாப்பிட்டதாக கூறியுள்ளனர்.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகரில் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் பள்ளி வாகனங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 3,414 வாகனங்களை சோதனை நடத்தினர்.
அப்போது பள்ளி வளாகத்திற்கு குழந்தைகளை ஏற்றிச் சென்ற 16 பள்ளி பேருந்து டிரைவர்கள் குடிபோதையில் இருப்பது கண்டிறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது நண்பரின் பெயர் சூட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு இரவு வெகுநேரம் வரை இருந்து மது சாப்பிட்டேன் என்று ஒருவர் தெரிவித்தார். மேலும் மற்றொரு டிரைவர் கூறும்போது பள்ளி முடிந்ததும் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி சோர்வடைந்தேன். இதனால் தூக்கத்திற்காக மது குடித்துவிட்டு தூங்கினேன் என்று கூறினார்.
பெங்களூர் நகரில் காலை 7 மணி முதல் 9 மணி வரை பள்ளி வளாகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள இடங்கள் மற்றும் சந்திப்புகளில் பள்ளி வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் டிரைவர்களை குழந்தைகளுக்கு தெரியாமல் தனியாக அழைத்து வந்து குடிபோதையில் இருக்கிறார்களா என்று அல்கோ மீட்டர் மூலம் சோதனை செய்யப்பட்டது. இதில் 16 பள்ளி டிரைவர்கள் போதையில் இருப்பது கண்டறியப்பட்டது.
பிடிப்பட்டவர்களில் சிலர் கூறும்போது இரவில் மது சாப்பிட்டதாக கூறியுள்ளனர். பொதுவாக அல்கோ மீட்டரில் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரத்திற்கு முன்பு மது அருந்தியிருந்தால் மட்டுமே தெரியும் எனவே பிடிப்பட்ட 16 பேரும் காலையில் தான் மது குடித்துள்ளனர். ஆனால் அவர்கள் இரவில் மது குடித்ததாக கூறுகிறார்கள். இரவில் மது குடித்தால் காலையில் அல்கோ மீட்டர் மூலம் அதை உறுதி செய்ய முடியாது, எனவே பள்ளி பேருந்து டிரைவர்கள் கூறுவது தவறனாது.
குடித்துவிட்டு பள்ளி குழந்தைகளை பேருந்தில் ஏற்றிச் செல்வது ஆபத்தானதாகும் எனவே குடிபோதையில் பிடிபட்ட 16 டிரைவர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 279 (கவனக்குறைவாக வண்டி ஓட்டுதல்) மற்றும் மோட்டார் வாகன சட்ட பிரிவு 185 (போதைப் பொருள் அல்லது குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்டு செய்ய வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.