டெல்லியில் பள்ளிக்கு சென்ற மாணவி மீது ஆசிட் வீச்சு- 3 வாலிபர்கள் கைது
- கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் மோட்டார் சைக்கிள் எண்ணை கண்டுபிடித்து ஆசிட் வீசிய வாலிபரை கண்டுபிடித்தனர்.
- மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார்.
டெல்லியில் உத்தம் நகர் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் தனது சகோதரியுடன் பள்ளிக்கு சென்றார். வீட்டை விட்டு வெளியே வந்த மாணவியும், அவரது சகோதரியும் சாலையில் நடந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மாஸ்க் அணிந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மாணவி மீது ஆசிட் வீசினர்.
இதில் முகத்தில் காயம்பட்ட சிறுமி அலறினார். அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி மீது ஆசிட் வீசியவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் மோட்டார் சைக்கிள் எண்ணை கண்டுபிடித்து ஆசிட் வீசிய வாலிபரை கண்டுபிடித்தனர். இதில் அவர்கள் சச்சின் அரோரா மற்றும் அவரது நண்பர்கள் ஹர்சித் அகர்வால், வீரேந்திர சிங் என தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சச்சின் அரோராவும் மாணவியும் அருகருகே வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே நட்பு இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சச்சின் அரோராவுடனான நட்பை மாணவி முறித்து கொண்டார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மாணவி மீது ஆசிட் வீசியதாக அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார். இதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதுபோல மகளிர் அமைப்புகளும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.