ஆந்திராவில் இடி தாக்கி மரம் வெட்டும் தொழிலாளர்கள் 4 பேர் பலி
- படுகாயம் அடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருமலை:
ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டத்தில் உள்ள லிங்கபாலம் அடுத்த போகலுவ் கிராமத்தில் ஜமாயில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சீமை கருவேல மரங்கள் ஏராளமாக உள்ளன.
இதனை வெட்ட காக்கிநாடா மாவட்டம், அன்னவரத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு வந்தனர்.
அனைவரும் அங்கு கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். இரவு வேலை செய்த களைப்பில் அனைவரும் காத்தோட்டமாக வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இடிதாக்கி சம்பவ இடத்திலேயே கொண்டபாபு(35), ராஜூ (28), தர்மராஜு(25), வேணு (19) ஆகிய 4 கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஏலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.