இந்தியா

தெலுங்கானாவில் 13 வயது பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்- 5 பேர் கைது

Published On 2024-11-02 04:43 GMT   |   Update On 2024-11-02 04:43 GMT
  • 6 மாதங்களாக அவ்வப்போது இவர்கள் சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டனர்.
  • மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் சந்தோஷ் என்பவர் மாணவியிடம் காதல் ஆசை வார்த்தை கூறினார். அவரை நம்பிய சிறுமி அவருடன் நெருங்கி பழகினார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட சந்தோஷ் சிறுமியை பலாத்காரம் செய்தார். இது குறித்து அவருடைய நண்பர்களான சிறுவர்கள் 4 பேரிடம் கூறினார். அவர்கள் சிறுமியை தனியாக அழைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டினர்.

6 மாதங்களாக அவ்வப்போது இவர்கள் சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டனர். அவர்களின் அட்டூழியங்களை சிறுமி அமைதியாக சகித்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி பள்ளி முடிந்ததும் சிறுமியை சந்தோஷ் அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கனவே அவருடைய நண்பர்கள் 4 பேர் இருந்தனர்.

அவர்கள் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர். இதனால் மாணவி வீட்டிற்கு தாமதமாகச் சென்றார்.

இரவு வெகு நேரம் கழித்து வந்ததால் சந்தேகம் அடைந்த அவருடைய தாய் மாணவியிடம் தாமதம் குறித்து கேட்டபோது மாணவி கதறி அழுதார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். அதிர்ச்சி அடைந்து அவருடைய தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

போலீசார் சந்தோஷ் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News