இரும்பு சத்து மாத்திரை எடுத்துக் கொண்ட 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
- பள்ளிகளில் மாணவர்கள் வாந்தி எடுப்பதாகவும், வயிற்று வலி இருப்பதாகவும் பள்ளி அதிகாரிகளிடம் இருந்து சுகாதார குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
- நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலம் சரைடியோ மாவட்டத்தில் உள்ள இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, சுகாதாரத் துறை ஊழியர்கள் வழங்கிய இரும்பு சத்து மாத்திரையை உட்கொண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாட்சாகு பிளாக் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள படாவ் துணை மையத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் குழு கெரானிபதர் கீழ்நிலைப் பள்ளியின் 75 மாணவர்களுக்கும், நிமாலியா கீழ்நிலைப் பள்ளியின் 26 மாணவர்களுக்கும் இரும்பு சத்து மாத்திரைகளை வழங்கியுள்ளது.
ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்கப்பட்ட இந்த மாத்திரைகளை குழந்தைகள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மாத்திரை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்தில், பள்ளிகளிலிருந்து மாணவர்கள் சிலர் வாந்தி எடுப்பதாகவும், வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளி அதிகாரிகளிடம் இருந்து சுகாதார குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் உடனடியாக சோனாரி சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், மேலும் 48 குழந்தைகள் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.