உத்தரகாண்டில் ஆற்றில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி
- புனித யாத்திரை சென்று திரும்பிய போது விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பித்தோராகர்:
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டம் லகான்பூர் அருகே தார்ச்சுலா-லிபுலேக் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று காளி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரகாண்டில் உள்ள ஆதி கைலாஷ் கோவிலுக்கு புனித யாத்திரை சென்று திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து பித்தோராகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வர் சிங் கூறும்போது, பெங்களூரைச் சேர்ந்த இருவரும், தெலுங்கானாவைச் சேர்ந்த இருவரும், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் என 6 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். இருள் மற்றும் பாதகமான சூழ்நிலை காரணமாக, உடல்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.
உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். புனித யாத்திரை சென்று திரும்பிய போது விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.