தமிழக அரசியல் நிலவரங்களை விளக்கினார்- மத்திய மந்திரி அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு
- தமிழக அரசியலில் கவர்னர் உரை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- சந்திப்பின்போது தமிழக கவர்னராக ஆர்.என்.ரவியே நீடிப்பார் என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அவர்கள் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்கள்.
இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர். இதில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக அமித்ஷாவிடம் அண்ணாமலை புகார் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் சட்டசபையில் கவர்னர் உரையின்போது நடந்த நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது. அதேபோல் தமிழகத்தில், தான் மேற்கொள்ளவுள்ள பாத யாத்திரை குறித்தும் அமித் ஷாவிடம் அண்ணாமலை விளக்கினார்.
இந்த சந்திப்பின்போது தமிழக கவர்னராக ஆர்.என்.ரவியே நீடிப்பார் என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் கவர்னர் உரை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.