ஆங்காங்கே சில தடைகள் இருந்தாலும் இந்தியா கூட்டணி பலமாக உள்ளது... காங்கிரஸ் சொல்கிறது
- தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி என அனைத்து கட்சிகளும் இணைந்து போராடும்.
- 18 எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை நிதிஷ் குமார் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி அன்று பாட்னாவில் கூட்டினார்.
கொல்கத்தா:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு பிரச்சனையால் திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகியவை தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன. இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதிஷ்குமாரும் அங்கிருந்து வெளியேறி உள்ளார். இதனால் இந்தியா கூட்டணி உடையும் நிலையில் காணப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி பலமாக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. மேற்கு வங்காள மாநிலம் பாக்டோக்ராவில் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக கூறியதாவது:-
இந்தியா கூட்டணி பலமாக உள்ளது. ஆங்காங்கே சில தடைகள் உள்ளன. ஆனால் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடுவோம். தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி என அனைத்து கட்சிகளும் இணைந்து போராடும்.
18 எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை நிதிஷ் குமார் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி அன்று பாட்னாவில் கூட்டினார். 2-வது கூட்டம் பெங்களூரில் ஜூலை 17 மற்றும் 18-ந் தேதிகளிலும், 3-வது கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதி மும்பையிலும் நடந்தது.
இந்த 3 கூட்டங்களிலும் அவர் முக்கிய பங்கு வகித்ததால் பா.ஜனதா மற்றும் அதன் சித்தாந்தத்தை கடைசி வரை எதிர்த்து போராட நிதிஷ்குமாரை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.