கேரளா முழுவதும் அரசு அலுவலகங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்
- அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்கான கருவிகள் பொருத்தும் பணி நடந்தது.
- பயோமெட்ரிக் வருகை பதிவு குறித்த தகவல்களை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதாகவும், பணி நேரம் முடியும் முன்பே அலுவலகத்தை விட்டு சென்று விடுவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வந்தது.
இதையடுத்து கேரள அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த கேரள தலைமை செயலாளர் ஜாய் ஏற்பாடு செய்தார். இதற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு, முதல் வேலை நாளில் கேரளாவின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என கடந்த வாரமே தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன் படி இன்று முதல் கேரளா அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்கான கருவிகள் பொருத்தும் பணி நடந்தது.
மேலும் பயோமெட்ரிக் வருகை பதிவு குறித்த தகவல்களை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு நாளும் இதனை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மேலும் இந்த வருகை பதிவு முறை நிதித்துறையின் சம்பள பதிவேடுகளிலும் பதிவாகும் முறையில் மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதுபோல அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வரவும், வெளியேறவும் அவர்களின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்தால் மட்டுமே முடியும். இதனால் இனி அலுவலகங்களுக்கு தாமதமாக வந்தாலோ, அல்லது அலுவலகத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேறவோ வாய்ப்பு இல்லை.
அவ்வாறு வெளியேறினால் அந்த ஊழியரின் விபரங்கள் அவர்களின் சம்பள பட்டியலில் பதிவாகும். இதன்மூலம் ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிலை உருவாகும்.
தற்போது கேரள அரசின் தலைமை செயலகத்தில் செயல்பட்டு வந்த இந்த முறை இப்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதே நேரம் குறைவான ஊழியர்களை கொண்டு இயங்கும் அலுவலகங்களில் இந்த முறை அமலுக்கு வரவில்லை.
மேலும் போலீஸ் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தவில்லை. விரைவில் அங்கும் இம்முறையை கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.