இந்தியா

இளைஞர்களின் திடீர் மரணத்துக்கு கொரோனா ஊசி காரணமல்ல

Published On 2023-10-31 04:41 GMT   |   Update On 2023-10-31 04:41 GMT
  • இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி:

கொரோனா தொற்றுக்கு பிறகு இளம் வயதில் மாரடைப்பில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு கொரோனா தடுப்பூசியே காரணம் என்று பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. இதை மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது மறுத்து வந்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களின் திடீர் மரணத்துக்கான காரணிகள் என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது குடும்ப சூழல்கள், வேலை தொடர்பான மன அழுத்தம், உணவு பழக்க வழக்கம், போதிய உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, புகை பிடிப்பது, போதை வஸ்து பழக்க வழக்கங்கள் போன்ற பல காரணங்கள் உள்ளன.

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென்று மாரடைப்பால் இறந்த 45 வயதுக்கு உட்பட்ட 729 பேரின் மரணம் தொடர்பாக ஆய்வு செய்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் 1.10.21 முதல் 31.3.2023-க்குள் மரணம் அடைந்தவர்கள்.

மருத்துவ குழுவினர் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டது மற்றும் மருத்துவ ரீதியாக நடத்திய ஆய்வில் கொரோனா தடுப்பூசி அவர்களின் மரணத்துக்கு காரணமல்ல என்பதும் பல்வேறு மருத்துவ காரணங்கள், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் தான் மரணத்துக்கு காரணமாக அமைந்திருந்தது என்றும் தெரிய வந்தது.

எனவே இவற்றை எப்படி சரி செய்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். மிதமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதேபோல் கெட்ட கொழுப்பு பரிசோதனையை அடிக்கடி செய்து கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

Tags:    

Similar News