திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்களை நீக்க முடிவு? ஆந்திராவில் பரபரப்பு
- கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்சியில் சுறுசுறுப்பாகவும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு விசுவாசமாகவும் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்.
- கிருஷ்ணமூர்த்தியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்க முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்க திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக சுப்பா ரெட்டியும், 28 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது உள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்களை நீக்கிவிட்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாகவும் மக்களிடையே நெருக்கமாக உள்ள கட்சியினருக்கு புதிய பதவி வழங்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
அதன்படி வரும் ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தப்படும் என கூறப்படுகிறது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதல் தற்போது வரை கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்சியில் சுறுசுறுப்பாகவும் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு விசுவாசமாகவும் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்.
எனவே கிருஷ்ணமூர்த்தியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்க முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதியில் நேற்று 74,024 பேர் தரிசனம் செய்தனர். 32,688 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.96 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.