இந்தியா

மம்தா பானர்ஜியின் திட்டம் பற்றி கவலை இல்லை- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

Published On 2024-01-21 06:01 GMT   |   Update On 2024-01-21 06:01 GMT
  • மம்தா பேசியது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
  • திரிணாமுல் காங்கிரஸ் எனது தொகுதியில் போட்டியிட்டாலும் எனக்கு கவலை இல்லை.

கொல்கத்தா:

விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பேச்சு வார்த்தையின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் முர்ஷிதா பாத் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசும் போது, மாவட்டத்தில் மட்டுமல்ல 3 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற பாடுபட வேண்டும்.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால் மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட தயாராக உள்ளது என்றார். அவரது இந்த பேச்சு இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பா.ஜனதா 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.


முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பஹரங்பூர் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெற்றி பெற்று இருந்தார். இந்நிலையில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என மம்தா பேசியது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் திரிணாமுல் காங்கிரஸ் எனது தொகுதியில் போட்டியிட்டாலும் எனக்கு கவலை இல்லை. எங்கள் தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பேசி இருக்கிறார்கள்.

நான் இந்த நிலைக்கு எளிதாக வந்துவிடவில்லை. பல்வேறு சவால்களை எதிர்கொண்டும், தேர்தலில் வெற்றி பெற்றே வந்துள்ளேன். எப்படி போட்டியிடுவது, எப்படி வெற்றி பெறுவது என்பது எனக்கு தெரியும் என்றார்.

Tags:    

Similar News