இந்தியா

கர்நாடகா சாலை விபத்து: இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Published On 2022-08-25 16:16 IST   |   Update On 2022-08-25 16:17:00 IST
  • சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் இரங்கல்.
  • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள கலம்பெல்லா என்கிற கிராமம் அருகே இன்று அதிகாலையில் டெம்போ ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்கள் ரெய்ச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தினக் கூலித் தொழிலாளர்கள் என்றும், இவர்கள் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தவர்கள் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடி இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்து நெஞ்சை உருக்குகிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பிரதமர் நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000ம் நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News