எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல- பினராயி விஜயன்
- காவல்துறையை முதல்-மந்திரி கட்டுப்படுத்துகிறார் என தெரிவித்தார்.
- கவர்னர், முதிர்ச்சியையும் விவேகத்தையும் காட்ட வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையில் கவர்னர் ஆரிப் முகமது கான் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது, இந்திய மாணவர் அமைப்பினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரை பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் வந்தார். அப்போது அவரது காரை கருப்புக்கொடியுடன் இந்திய மாணவர் அமைப்பினர் வழிமறித்து, கோ பேக் என கோஷமிட்டனர்.
போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக காரில் இருந்து இறங்கிய கவர்னர் ஆரிப் முகமது கான், பாதுகாப்பு வளையத்தை மீறி, சாலையோரம் இருந்த டீக்கடையில் போடப்பட்டிருந்த நாற்காலியை எடுத்து சாலையில் போட்டு அமர்ந்தார்.
போலீசார் தனக்கு சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை என குற்றம் சாட்டிய அவர், தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் அவர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட எப்.ஐ.ஆரை போலீசார் காண்பித்தனர். அதன்பிறகே கவர்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் கூறுகையில், கேரளாவில் காவல்துறை நன்றாக உள்ளது. ஆனால் அவர்களை சரியாக செயல்பட அனுமதிக்கவில்லை. காவல்துறையை முதல்-மந்திரி கட்டுப்படுத்துகிறார் என தெரிவித்தார்.
இந்த சூழலில் அவருக்கு மத்திய அரசின் இசட் பிளஸ் சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-
மாநிலத்தின் தலைவர் என்ற முறையில் கவர்னருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்தப் பாதுகாப்பு வேண்டாம் என்று அவர் கூறுகிறார். அவர் வித்தியாசமான முறையில் விஷயங்களை கையாளுகிறார். பதவியில் இருப்பவர்களுக்கு எதிராக பல்வேறு விதமான எதிர்ப்புகள் இருக்கும்.
போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக கவர்னர், சாலையில் இறங்குவது வேடிக்கையாக உள்ளது. எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல. கவர்னர், முதிர்ச்சியையும் விவேகத்தையும் காட்ட வேண்டும்.
எங்காவது எப்.ஐ.ஆருக்காக ஸ்டிரைக் பார்த்திருக்கிறீர்களா? கவர்னர், கேரளாவுக்கு சவால் விடுகிறார். ஞானம் தன்னால் பெற முடியாது. அனுபவத்தில் தான் வர வேண்டும். தற்போது அவருக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களால் வழக்கு எதுவும் பதிவு செய்ய முடியுமா? கேரளாவில் சில ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தற்போது கவர்னரும் சேர்ந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பினராயி விஜயன், அரசியல் சாசனங்களுக்கு சவால் விடுத்து கூட்டாட்சி கொள்கைகளை குழிதோண்டி புதைக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டியது அவசியம் என்றார்.
வருகிற 8-ந் தேதி டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற உள்ள போராட்டத்திற்கு முன்னதாக ஒருங்கிணைந்த போராட்டம் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.