கேரளாவில் 31-ந்தேதி முதல் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
- சமீப கால ஆண்டுகளில் மாநிலத்தில் பெய்ததை போன்று மிக வலுவான மழையாக இருக்கும் என்றும், ஜூன் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொச்சி, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் அங்கு கோடை வெப்பம் தணிந்து குளர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது. மாநிலத்தில் கோடைமழை வெளுத்துவாங்கி வரும் நிலையில், வருகிற 31-ந் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் நாளை(29-ந்தேதி) மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்களும், இடுக்கியில் 31-ந்தேதியும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் வருகிற 31-ந்தேதி முதல் கேரள மாநிலத்தில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப கால ஆண்டுகளில் மாநிலத்தில் பெய்ததை போன்று மிக வலுவான மழையாக இருக்கும் என்றும், ஜூன் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.