இந்தியா

கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை- இன்று முதல் 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Published On 2024-11-01 04:00 GMT   |   Update On 2024-11-01 04:00 GMT
  • முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.
  • மழையின் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

பெங்களூரு:

வளிமண்டல சுழற்சி காரணமாக பெங்களூரு, குடகு, மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெங்களூரு ஆர்.ஆர்.நகர், கெங்கேரி, விஜயநகர், ராஜாஜிநகர், பேடராயனபுரா, சந்திரா லே-அவுட், ஞானபாரதி, நாகரபாவி, மெஜஸ்டிக், சிட்டி மார்க்கெட், ஜெயநகர், பாகலூர் உள்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக சுரங்க பாதைகள், ரெயில்வே சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சும்மனஹள்ளி ஜங்ஷன், பாகலூர் கிராஸ், ஓசூர் மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.

மழையின் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். பட்டாசுகள் விற்பனையிலும் பாதிப்பு ஏற்பட்டது. சிட்டி மார்க்கெட்டில் பெய்த மழையின் காரணமாக அங்கு காய்கறி, பூக்கள், பழங்கள் வாங்க வந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

விஜயநகர் ஹர்பனஹள்ளி, ஹாவேரியில் தலா 4 செ.மீ. மழை, தார்வாட்டில் உள்ள தரிகெரே, சிக்கமகளூர் மாவட்டம் தரிகெரே, தும்கூர் மாவட்டம் திபட்டூர், ஷிமோகா மாவட்டம் பத்ராவதி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று முதல் 3-ந்தேதி வரை ஷிமோகா, ராமநகர், மைசூரு, மாண்டியா, குடகு, சிக்கமகளூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சார்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News