இந்தியா

ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் 12-ந்தேதி ஆஜராக சம்மன்

Published On 2022-09-02 07:17 GMT   |   Update On 2022-09-02 07:17 GMT
  • சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
  • வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது.

புதுடெல்லி:

பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார்.

2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது 2 தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது. மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜாக்குலின் 26-ந்தேதி ஆஜராகுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் மிரட்டி பணம் பறித்தது மற்றும் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் வருகிற 12-ந்தேதி ஆஜராகுமாறு ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

Similar News