மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு
- களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- கேரளாவின் மதச்சார்பற்ற நம்பிக்கையை கெடுக்க மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கொடிய விஷத்தை கக்குவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.
திருவனந்தபுரம்:
எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துக்கள் எதுவும் வெளியிடக்கூ டாது என்று அரசு எச்சரித்திருந்தது.
களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் கேரள அரசு ஹமாசுக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டிய மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், குண்டு வெடிப்புகளை மாநிலத்தின் அரசியலுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டார்.
அவரது கருத்துக்கு கேரள அரசு மற்றும் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. கேரளாவின் மதச்சார்பற்ற நம்பிக்கையை கெடுக்க மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கொடிய விஷத்தை கக்குவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை பரப்பியதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது 153(கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதல்), 153ஏ(பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மட்டுமின்றி இதே போன்று 18 பேர் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.