இந்தியா கூட்டணியின் 'லோகோ' வெளியிடப்படும்- அசோக் சவான் தகவல்
- 3-வது கூட்டத்தில் அடுத்த நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்கப்படும்.
- மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 26 முதல் 27 கட்சிகள் பங்கேற்கும்.
மும்பை:
அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்- மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டார்.
எதிர்க்கட்சிகள் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது. இதில் 17 கட்சிகள் பங்கேற்கின்றன.
எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந் தேதிகளில் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் அணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயரிடப்பட்டது.
இந்த கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன. அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து பா.ஜனதாவை வீழ்த்துவது என்று இந்த கூட்டம் முடிவு செய்யப்பட்டது.
எதிர்க்கட்சி அணியான இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வருகிற 31 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதி ஆகிய 2 தினங்களில் நடக்கிறது.
இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மகா விகாஸ் அகாதி கூட்டணியில இடம் பெற்றுள்ள காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தங்குவதற்கு 175 ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மும்பையில் 31-ந் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் லோகோ வெளியிடப்படும் என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியும், அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 26 முதல் 27 கட்சிகள் பங்கேற்கும். வருகிற 31 மற்றும் செப்டம்பர் 17-ந் தேதிகூட்டம் நடைபெறும். 3-வது கூட்டத்தில் அடுத்த நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்கப்படும்.
நாங்கள் ஒரு பொதுவான லோகோவை உருவாக்க முடிவு செய்துள்ளோம். வருகிற 31-ந் தேதி லோகோ வெளியிடப்படும்.
இவ்வாறு அசோக் சவான் கூறியுள்ளார்.