விவசாயியை கொன்று சாப்பிட்ட ஆட்கொல்லி புலி சிக்கியது
- புலி நடமாட்டம் இருந்த பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- புலியை திருச்சூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு மாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியை அடுத்த மூடக் கொல்லி பகுதியை சேர்ந்த பிரஜீஷ்(வயது36) என்ற விவசாயி கடந்த 9-ந்தேதி, புல் அறுப்பதற்காக காட்டுப் பகுதிக்கு சென்றார். அப்போது அவரை ஒரு புலி அடித்துக்கொன்றது.
மேலும் அவரது உடலை புலி தின்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். விவசாயியை கொன்று தின்ற புலியை சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆட்கொல்லி புலியை பிடிக்க 80பேர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் துப்பாக்கியுடன் புலி நடமாட்டம் இருந்த பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும் பல இடங்களில் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகளும் வைக்கப்பட்டன. அது மட்டுமின்றி புலியை கண்டுபிடிக்க 2 கும்கி யானைகளும் பயன்படுத்தப்பட்டன. அந்த யானைகளை வனத்துறையினர் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று புலியை தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.
ஆனால் ஆட்கொல்லி புலி தொடர்ந்து சிக்காமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் விவசாயியை கொன்ற இடத்துக்கு சற்று தொலைவில் கூடலூர் காபி தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் ஆட்கொல்லி புலி சிக்கியது. இதையடுத்து அந்த புலியை சுல்தான்பத்தேரி அருகே பச்சடியில் உள்ள விலங்குகள் காப்பகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அந்த புலியை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த புலிக்கு சிறிய அளவில் காயங்கள் இருந்தன. இதையடுத்து அந்த புலியை திருச்சூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு மாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
விவசாயியை கொன்ற ஆட்கொல்லி புலி சிக்கிய தகவல் அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் அந்த புலியை உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும், அதனை சுட்டுக்கொல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனைத்தொடர்ந்து அந்த புலியை திருச்சூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.