டெல்லி நட்சத்திர ஓட்டலில் 4 மாதம் தங்கிய வாலிபர்- ரூ.23 லட்சம் வாடகை செலுத்தாமல் வெள்ளி பொருட்களுடன் தப்பி ஓட்டம்
- மர்மமனிதனை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
- ஓட்டலில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான அவனது உருவத்தை வைத்து தேடி வருகின்றனர்.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள பிரபலமான நட்சத்திர ஓட்டலுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி மாடர்ன் உடையில் வாலிபர் ஒருவர் வந்தார்.
அவர் தான் அரபு நாட்டை சேர்ந்த வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் தொழில் விஷயமாக டெல்லி வந்துள்ளேன் என்றும் கூறி அறை கேட்டார்.
தன்னுடைய பெயர் முகமது ஷெரீப் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டான். தன்னுடைய அடையாள அட்டையையும் அவர் காட்டினான். அவன் டிப்-டாப்பாக இருந்ததால் ஓட்டல் ஊழியர்கள் அவனுக்கு அறை ஒதுக்கி கொடுத்தனர். அந்த வாலிபர் தொடர்ந்து 4 மாதங்கள் அந்த ஓட்டலில் தங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தான். 4 மாதம் கழித்து அவன் அறையை காலி செய்வதாக கூறினான். இதற்கு அறை வாடகை ரூ. 35 லட்சம் வந்தது. ஏற்கனவே அந்த வாலிபர் 11.50 லட்சம் ரூபாய் செலுத்தி இருந்தான். மீதம் ரூ.23 லட்சம் என வந்தது.
இதற்காக அவன் ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தான். அவனை ஓட்டல் ஊழியர்கள் முழுமையாக நம்பியதால் அந்த காசோலையை வாங்கி கொண்டனர். ஆனால் வங்கியில் செலுத்திய போது அதில் பணம் இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவன் தங்கி இருந்த அறையில் சோதனை செய்த போது அங்கிருந்த வெள்ளி பாத்திரங்கள் மற்றும் தட்டுகள் காணாமல் போய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஓட்டல் நிர்வாகத்தினர் இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவன் ஓட்டலில் கொடுத்து இருந்த அடையாள அட்டை போலியானது என்றும் அவன் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன் என பொய் சொல்லி ஏமாற்று வேலையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது.
இதைத்தொடர்ந்து அந்த மர்மமனிதனை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஓட்டலில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான அவனது உருவத்தை வைத்து தேடி வருகின்றனர்.