இந்தியா

காதலனை கொலை செய்த வழக்கு- கிரீஷ்மாவின் மாறுபட்ட வாக்குமூலத்தால் பாதிப்பு இல்லை: விசாரணை அதிகாரி தகவல்

Published On 2022-12-10 06:57 GMT   |   Update On 2022-12-10 06:57 GMT
  • தற்போதைய வாக்குமூலம், வழக்கின் விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது.
  • இந்த வழக்கில் 70 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம் என விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள மூறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ஷரோன்ராஜ் (வயது 23).

கடந்த அக்டோபர் மாதம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஷரோன்ராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 25-ந்தேதி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் தனது மகன் மெல்லக் கொல்லும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக ஷரோன்ராஜின் தந்தை ஜெயராமன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். மகனின் காதலியான குமரி மாவட்ட இளம்பெண் வீட்டுக்குச் சென்று வந்தபிறகு தான் மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாறசாலை போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஷரோன்ராஜ் படித்த போது, களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளதும், அவரது வீட்டுக்கு சென்று வந்தபிறகு தான் ஷரோன்ராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. இது பற்றி விசாரித்தபோது, ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானதால், அக்டோபர் 14-ந்தேதி ஷரோன்ராஜை தனது வீட்டிற்கு வரவழைத்து கசாயத்தில் பூச்சிமருந்து கலந்து கிரீஷ்மா கொடுத்ததும் இதனால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஷரோன்ராஜ் இறந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் கிரீஷ்மாவிடம் விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது, ஷரோன்ராஜூடன் அவர் சென்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெற்ற விசாரணையில், கிரீஷ்மா, குளிர்பானத்தில் விஷம் கலந்து அடிக்கடி ஷரோன் ராஜிக்கு கொடுத்திருப்பது தெரியவந்தது.

இதற்கிடையில் கொலைக்கான தடயங்களை மறைத்ததாக, கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் போலீசார் சீல் வைத்திருந்த கிரீஷ்மாவின் வீட்டு கதவு பூட்டை யாரோ உடைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் வழக்கில் திடீர் திருப்பமாக, தான் ஷரோன்ராஜை கொலை செய்யவில்லை என்றும், போலீசாரின் துன்புறுத்தல் காரணமாக கசாயத்தில் விஷம் கலந்ததாக ஒப்புக்கொண்டேன் என மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிரீஷ்மா வாக்குமூலம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அவரது வாக்குமூலத்தால் வழக்கு விசாரணை பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது. ஆனால் இதனை வழக்கின் விசாரணை அதிகாரி மறுத்துள்ளார். ஷரோன்ராஜை, கிரீஷ்மா கொலை செய்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானப் பூர்வமாக சேகரித்துள்ளோம். அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே தற்போதைய வாக்குமூலம், வழக்கின் விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது. இந்த வழக்கில் 70 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம். கிரீஷ்மாவை காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்ய உள்ளோம். மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அனுமதி வழங்கவில்லை என்றால், உயர்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News