இந்தியா

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு சிஏஏ அமலுக்கு வரும்

Published On 2024-02-10 08:02 GMT   |   Update On 2024-02-10 11:08 GMT
  • அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நாங்கள் ரத்து செய்துள்ளோம்
  • எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரலாம்.

புதுடெல்லி:

உலகளாவிய வணிக உச்சி மாநாடு டெல்லியில் நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் வாயிலாக குடியுரிமை வழங்கப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்படும். இது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நாங்கள் ரத்து செய்துள்ளோம், எனவே நாட்டு மக்கள் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு 370 இடங்களில் வெற்றியை தருவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து எந்த சஸ்பென்சும் இல்லை. காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் கூட தாங்கள் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர வேண்டும் என்பதை உணர்ந்துள்ளன. எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரலாம்.


இந்த தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான தேர்தலாக இருக்காது. மாறாக வளர்ச்சியை கொடுக்கும் எங்களுக்கும், வெற்று கோஷங்களை கொடுப்பவர்களுக்கும் இடையே நடக்கும் தேர்தலாக இருக்கும்.

1947-ம் ஆண்டு நாட்டை பிரித்ததற்கு காங்கிரஸ் கட்சி காரணமாக இருந்தது. இதனால் நேரு, காந்தி ஆகியோரின் வாரிசுகளுக்கு ஒற்றுமை யாத்திரை நடத்த உரிமை இல்லை.

2014-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை இழந்த போது நாடு மோசமான நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் பொருளாதாரம் சீரழிந்து காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் ஊழல் நிறைந்திருந்தது. வெளி நாட்டு முதலீடுகள் வரவில்லை.


அந்த நேரத்தில் நாங்கள் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருந்தால் அது உலகுக்கு தவறான செய்தியை கொடுத்திருக்கும். ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு எங்களது அரசு பொருளாதாரத்தை மீட்டெடுத்து வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்துள்ளது. எங்குமே ஊழல் இல்லை. எனவே வெள்ளை அறிக்கை வெளியிட இதுவே சரியான தருணம். எனவே வெள்ளை அறிக்கையை வெளியிட்டு உள்ளோம்.

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டப்பட வேண்டும் என்று 500 முதல் 550 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அரசியல், சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி ராமர் கோவில் கட்ட அனுமதிக்கப்படவில்லை. அதை இப்போது நிறை வேற்றியுள்ளோம்.

ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சியினர் ஏன் கொண்டாடவில்லை?

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News